பச்சை கலர் செருப்பு
ஒரு நல்லது நடந்திருக்கிறது. என் மூன்றரை வயது மகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயன்படுத்திய பச்சை கலர் செருப்பை விடுத்து புதியதாய் வாங்கிய செருப்பை அணிந்துகொண்டான்.
சின்ன விஷயம் தான் ஆனால் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா ?
ஒரு நாள் சும்மா எதார்த்தமா அந்த பச்ச கலர் செருப்பை ஒரு சூப்பர் மார்க்கெட்ல் 10 ரியலுக்கு வாங்கினோம்.
அதற்கு முன்னாடி அவனுக்கு இரு சோடி நல்ல ஷூம் ஒரு தரமான செருப்பும் இருந்தன.
இது சைனா செருப்பு . ரப்பர் செருப்பு. அது வீட்டுக்கு வந்தது முதல் வேற எந்த செருப்பையும் அவன் அணியவேயில்ல. அந்த க்ரீன் செப்பல் தான் வேண்டும்முன்னு அடம்புடிச்சி எடுத்து மாட்டிக்குவான். முதல்ல குழந்தைன்னு விட்டுடோம். ஆனா போக போக எப்ப வெளியில் கிளம்பினாலும் பிறந்த நாள் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் க்ரீன் சேப்பல். உடைகள் அவ்வளவு அழகாக இருக்கும் ஆனால் சம்மந்தமில்லாமல் காலில் பச்சை கலர் செருப்பு.
நாங்களும் விதவிதமான, விலை குறைந்த விலை அதிகமான செருப்புக்களை வாங்கி வந்து அவன் காலடியில் வைத்துவிட்டு மகிழா அணிந்துகொள்க , உங்கள் திரு பாதம் அந்த இத்துப்போன பழைய செருப்பை கால்விடுக..என்று கெஞ்சுவோம்
ம் நோ ஒன்லி க்ரீன் செப்பல்
ஒரு நாள் அவன் அண்ணன் அந்த செருப்பை எங்கோ ஒளித்து வைத்துவிட்டான். அன்று அவன் பள்ளிக்கு, நாங்கள் ஆசிரியரை சந்திக்க செல்லவேண்டும். நான் மனைவி எல்லாம் கிளம்பிவிட்டோம். க்ரீன் செப்பலை காணவில்லை. சின்னவன் வீட்டை விட்டு நகரவில்லை. நேரம் கடந்துக்கொண்டு இருந்தது . எங்களுக்கு ரத்தம் கொதித்து மூளைக்கும் காலுக்கும் அல்லாடிகொண்டு இருந்தது . ஒருவழியாக பெரியவன் இறங்கிவந்து ஒளித்துவைத்திருந்த செருப்பை எடுத்துவந்தான். ஏன்டா இப்படி என்று கையை ஓங்கினேன். அப்பா சும்மா இருங்க . இவன் பச்ச கலர் செருப்பை போட்டு வந்தா மறுநாள் பசங்க என்ன தான் கேலி பண்ணுவாங்க..
ஒருவழியா அவன சமாதான படுத்தி இவன சமாதான படுத்தி .... முடியல
இதுவாவது பரவில்லை ஒரு நாள் ஒரு பெரிய மால்ல சுத்திட்டு ஆஞ்சி அசந்து கார்ல வந்து அமர்ந்தா அட ஆத்தா க்ரீன் செருப்பு ஒன்னு தான் இருக்கு இன்னொன்ன காணோம். சின்னவனை பார்த்தேன் தூங்கிக்கொண்டு இருந்தான். கவிதாவை பார்த்தேன் என்ன கிளம்பலாமா ? என்று தயங்கினேன். என்னது கிளம்பலாமா? சார் அவன் தூங்கி எழுந்தா மூணு மணிநேரம் மூச்சு முட்ட அழுவான் பரவாயில்லையா , நா மெதுவா காரைவிட்டு இறங்கி மாலுக்குள் வந்த வழியே செருப்பை தேடிச்சென்றேன். இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை சென்று பார்த்தேன் செருப்பு கிடைக்கவில்லை. அங்கு துடைத்துக்கொண்டு இருந்த நேப்பாளி பையனிடம் கேட்டேன். நஹி மாலும் என்றான். திரும்பி நடந்துவரும்போது ஒவ்வொரு குப்பை தொட்டியையும் எட்டி பார்த்தேன். கையைவிட்டு கிளறலாமா என்று கூட தோன்றியது. CCTV பார்க்கலாமா அப்படியே பார்த்து கண்டுபிடித்தால் அந்த சாயம்போன பச்சை கலர் செருப்பை பார்த்தால் செக்யூரிட்டி என்ன நினைப்பான். ஏசுவே கர்த்தாவே கைவிடாதிரும் . என் பிரார்த்தனை வீணாகவில்லை , ஒரு மலையாளி நண்பர் "கியா டூன்றே" என்கிறார். மலையாளிகள் மலையாளம் பேசினாலே நமக்கு புரிந்துவிடும் . ஆனால் அவர்கள் சட்டென நம்மிடம் இந்தி பேசிவிடுகிறார்கள் . அது நமக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. ஒரு செருப்பை தேடுகிறேன் என்று சொன்னேன். இப்பதான் ஹவுஸ் கீப்பிங் பையன் எடுத்துக்கொண்டு போகிறான் என்றார். அவர் கைகாட்டிய திசையில் ஓட்டமும் நடையுமாக பாய்ந்தேன். ஒரு பையன் தரையை துடைத்துக்கொண்டு இருந்தான். போன வேகத்தில் செருப்பு என்றேன். அவனுக்கு புரியவைக்க எனக்கு பொறுமையில்லை. அவன் அருகில் வைத்திருந்த குப்பை பையை திறந்தேன்.
கிரீன் செப்பல் ஆம் கிரீன் செப்பல் கிடைத்துவிட்டது. வெற்றி நடையோடு திருப்பி காரை நோக்கி நடந்தேன். திடீரென அந்த மலையாளி நண்பரின் நினைவு வந்தது. திரும்பி சென்று அவர் பெயர் கேட்கவேண்டும் எனவும் தோன்றியது . சரி அவர் பெயர் எதுவாக இருந்தால் என்ன நாம் கருணை என்று நினைவில் வைத்துக்கொள்வோம். ( வரிகள் உபயம் எழுத்தாளர் பஷீர் சொன்னதாக பாவா அடிக்கடி மேடையில் சொல்வது ).
ஊருக்கு வரும்போது பிளைட்ல் கழற்றி விட்ட செருப்பு நகர்ந்து நகர்ந்து பின்னல் சென்றுவிட்டது. சின்னவன் மெதுவாக ஆலாபனை துவங்கி உச்ச கதியில் நிசாதத்துக்கு சற்று மேலே சென்று அலற தொடங்கினான் . பிளைட்ல் இருந்த மொத்த ஆட்களும் எங்களை யோவ் என்னய்யா இது என்று பார்க்க நான் பதட்டத்தில் சீட் பெல்ட்ஐ அவசரமாக தளர்த்தி அப்படியே கீழே முட்டிபோட்டு குழந்தைபோல நகர்ந்து அடுத்த சீட்டை எட்டி பார்த்தேன். சீட்டில் அமர்ந்திருந்த பெண் படக்கென காலை மேலே எடுத்துவைத்துக்கொண்டு என்னை முறைக்க ஐயையோ தப்பா நினைக்காதீங்க குழந்தையோட செருப்பு கிழ இருக்கா பாருங்க என்றேன்.
அந்த பெண்ணே கீழே குனிந்து செருப்பை எடுத்துக்கொடுத்தாள். அதை பவ்வியமாக கொண்டுபோய் சின்னவனிடம் கொடுத்தேன். சரி அழ ஆரமித்துவிட்டோம் இடையில் நிறுத்தினால் மரியாதை இல்லை என்று இன்னும் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு பின்பு அமைதியானான்.
ஊரில் ஒரு கல்யாணத்துக்கு செல்ல மூன்று வண்டிகளில் ஆட்கள் ஏறி அமர்ந்திருக்க அரைமணிநேரம் நானும் பெரியவனும் அந்த செருப்பை தேடிக்கொண்டு இருந்தோம். அப்பா மகிழா தாம்பா எங்கையாவது ஒளிச்சி வச்சிருப்பான். டிவி ரிமோட்டை இட்லி குண்டானால ஒளிச்சிவச்சிருந்தான். நான் தான் கண்டுபிடித்தேன். டே மகனே இதையும் எப்படியாவது கண்டுபுடிடா என்றேன் . அப்பா அவன் ஆளு குட்ட அதனால மேல எல்லாம் தேடாதிங்க கீழயே எங்காவது சந்துகொள்ள ஒளிச்சி வச்சிருப்பான். பல கட்ட ஆலோசனை தேடளுக்கு பிறகு தண்ணிகாயவைக்கும் அடுப்பில் அந்த செருப்பு இருந்தது.
இது போல சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியது தான் ....
ஒரு வழியாக அந்த பழைய பச்ச செருப்பு அவன் மனதிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக அகன்றுகொண்டு இருக்கிறது .
சரி நம்ம ஏதாவது அது போல பலகாலம் ஒரே பொருளை திருப்பி திருப்பி பயன்படுத்துறோமா என்று பார்த்தா ஆமா என் கிட்ட பாழடைந்து இற்று விழுந்த ஒரு மணிபர்ஸ் பயன்பாட்டில் இருக்கிறது.
கவிதாவை கேட்டேன். அவளிடம் ஒரு பதினைந்து வருட பழங்கால சீப்பு இருக்கிறது. இப்போது சீப்புக்கு வயதாகி பற்கள் உதிர்கின்றன. ஆனாலும் இன்னும் அதில் தான் தலைவருகிறாள். அந்த சீப்புக்கு கூட ஒரு சின்ன கதை இருக்கு . ஒரு நாள் நண்பர் ஒருவர் குடும்பத்தோடு நம்ம வீட்டுக்கு வந்தார் . அவருடைய குட்டிப்பையன் அங்கும் இங்கும் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தான். அவன் அம்மா கவிதாவிடம் வந்து அக்கா தம்பி ஒரு சீப்பை எடுத்து ஜன்னலுக்கு வெளியே ரோட்டுல வீசிட்டான். நானும் புதுசோன்னு பயந்துட்டேன் ஆனா அது பழசு தான் பரவாயில்லையா என்கிறார். நான் பதறி அடித்து ரோட்டுக்கு ஓடி அதை மீட்டு கொண்டுவந்தேன்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இப்படி ஏதோ ஒன்றை அர்த்தமற்று பற்றிக்கொள்கிறோம் போலும் .
இறுதியாக அந்த பழைய க்ரீன் செப்பல் என்ன ஆனது. புதிய செப்பல் அவன் போட்டுக்கொண்ட பிறகு அந்த பழைய செருப்பை கார் டிக்கியில் ஸ்டெபிணி டயர்க்கு அடியில் ஒளித்து வைத்திருந்தேன். அப்படியே தலையை சுற்றி எரிந்து விடலாம் என்று எண்ணம் . ஆனால் அதை அப்படியே மறந்துவிட்டேன். நான்கைந்து நாள் கழித்து நினைவு வந்து அதை கார் டிக்கியியிலிருந்து கையில் எடுத்தேன். அந்த செருப்பு ஒரு குழந்தை போல இருந்தது. தூக்கி போட மனம் வரவில்லை . அதை கொண்டுவந்து கவிதாவிடம் கொடுத்தேன். கவிதா சிரித்துக்கொண்டே ஆமா இத நம்ம பத்திரமா வைத்துக்கொள்ளலாம் என்றாள்.
சரி புது செருப்பு என்ன கலர்ன்னு கேக்கிறிங்களா , அட போங்க பாஸ் .. அதும் க்ரீன் கலர் தான் . கெட்டப் தான் மறிச்சு குடுமி மாறல .