ஒரு நடை சென்று வாருங்கள்

ஒரு நடை சென்று வாருங்கள்
மழை நின்ற சாலை ஒன்று உங்களுக்காக வெளியே காத்திருக்கிறது
ராஜாவின் தேர்ந்த பாடல்கள் சில
உங்களுக்கு தருகிறேன்
வெளியில் ஒரு நடை சென்று வாருங்கள்
சாலை வளைவில் வேப்பமர
இலைகளில் தேங்கிய மழைத்துளிகள்
காற்றசைவில் உங்கள்மீது விழுந்து சிலு சிலுக்க
ஏற்படாகியிருக்கிறது
கொஞ்சம் தள்ளி இரண்டு நத்தைகள் சாலையை கடக்கும்
அதை கடந்து செல்லவேண்டாம் , கைகட்டி காத்திருங்கள்
மழைக்கு ஒதுங்கிய ஆடுகளை ஒட்டிக்கொண்டு அன்னம்மாள் கிழவி
எதிரே வருவாள்
அதில் இரண்டு ஆடுகள் உங்களை கண்டவுடன் நீர் தெறிக்க உடல் உதறிக்கொள்ளும் , சற்று தள்ளி நின்றுகொள்ளுங்கள்
நனைந்த சாக்கு பையை தலையில் கவிழ்த்து கொண்டு எதிரே வரும் கொட்டாப்புளி கிழவனிடம் மழை நின்றுவிட்டதை சொல்லிவிடுங்கள்
மழை நின்ற வானம் சற்று குழம்பி இருக்கிறது அதனால் சில காக்கைகள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருக்கிறன. அதை பற்றி கண்டுகொள்ளவேண்டாம்.
மழையோடு சேர்ந்து ஆடிய சிறுவர்கள் சிலர் தேங்கிய தண்ணீரில் குதித்து விளையாடிக்கொண்டு இருகிறார்கள். அதில் நேற்று மூத்த செங்கொடியை அவள் அம்மா தேடிக்கொண்டு இருக்கிறாள் . அவளை மட்டும் வீட்டுக்கு போக சொல்லிவிடுங்கள்.
அவ்வளவு தான்
நீங்கள் சற்று ஆறுதலாக ஒரு நடை சென்று வாருங்கள்